நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம், கள்ளிமேடு, செம்போடை, தோப்புத்துறை, குரவப்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கரியாப்பட்டினம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது. இதில் அங்கு தென்னைமரங்களில் கட்டப்பட்டிருந்த அவருக்கு சொந்தமான 2 ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தது.
மேலும் மின்னல் தாக்கியதில் தென்னை மரமும், தமிழ்ச்செல்வன் வீட்டில் இருந்த மின்சார பொருட்களும் சேதமடைந்தன. வேதாரண்யம் நகராட்சி பகுதியில் பெய்யவில்லை. நகராட்சி பகுதி மேகமூட்டத்துடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கீழ்வேளூர், சிக்கல், ஆழியூர், அகரகடம்பனூர், கோகூர், வடகரை, ஒக்கூர், வெங்கிடங்கால், தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை. குருக்கத்தி, கூத்தூர் குருமனாங்குடி, நீலப்பாடி, ஏரவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்த மழை 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.. இதனால பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழை குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கும் ஏற்றது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.