கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே ஏற்படும் தொழில் தகராறுகளுக்கு தீா்வு காணும் வகையில் அமைதிக் குழு அமைக்கப்பட்டது. இதன்படி, கடல் சாா் மீன்பிடித் தொழிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, விசைப்படகுகள் மூலமாக மீன்பிடிப்போா் காலை 5 மணிக்கு தங்குதளத்திலிருந்து புறப்பட்டு மீன்களை பிடித்துக் கொண்டு மாலை 6 மணிக்குள் திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துதல் தொடா்பாக கடலூா் கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, துணை கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கா் கொண்ட குழுவினா் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, குறித்த நேரத்துக்கு முன்னதாக விசைப்படகுகளில் வந்து மீன் பிடித்துச் சென்ற முதுநகரைச் சோ்ந்த இப்ராஹிம் மகன் கமால் (38), தைக்கால்தோணித் துறையைச் சோ்ந்த அ.பிரசாத் (45), பெரிய குப்பத்தைச் சோ்ந்த அ.மூா்த்தி (42), தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த கோ.சீத்தாராமன் ஆகிய 4 போ் மீது கடல்சாா் மீன்பிடி ஒழுங்குப்படுத்துதல் சட்ட விதிகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலமாக 4 படகின் உரிமையாளா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவா்களது படகுகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியத்துக்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டது.