கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் படையப்பா (20). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா அடித்துவிட்டு போதையில் ஒரு குத்துப்பாட்டு பாடி வாட்ஸ் அப்பில் பதிவிட்டிருந்தார்.
படையப்பாவின் இந்தக் குத்துப் பாட்டு வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனைப் பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், படையப்பாவை வலைவீசி தேடினார்.
இதற்கிடையில் மற்றொரு பாட்டு பாடி வீடியோ எடுப்பதற்கான முயற்சியில் இருந்த படையப்பாவை கையும் களவுமாகப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, பண்ருட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சந்துரு என்பவரிடம் கஞ்சா வாங்கியதாக படையப்பா கொடுத்த தகவலின்பேரில கஞ்சா வியாபாரி சந்துருவையும் கைது செய்தனர்.
படையப்பா, அவருக்குக் கஞ்சா கொடுத்த கஞ்சா வியாபாரி சந்துரு ஆகிய இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சாதுரியமாக செயல்பட்டு கஞ்சா வியாபாரியையும், படையப்பாவையும் கைது செய்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு கடலூர் எஸ்.பி. சக்திகணேஷ், பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.