கடலூர் மாவட்ட கடல் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, படகுகள் மூலம் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக கடலூர் மாவட்ட மீன்வளத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சின்னகுப்பன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன், கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் இதர அலுவலர்கள் நேற்று (24.08.2021) ரோந்து பணி மேற்கொண்டனர். ரோந்துப்பணியின்போது புதுச்சேரி மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்கள் பிடிப்பது தெரிந்தது
அதையடுத்து சுருக்குமடி படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றபோது சுமார் 30 சுருக்குமடி படகுகளில் வந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு, மிரட்டல் விடுத்தனர். எனினும் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், அனைத்து சுருக்குமடி வலை படகுகளையும் கடலூர் மாவட்ட கடல் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பினர்.
இதுபோன்று புதுச்சேரி படகுகள் கடலூர் பகுதிகளில் சுருக்குமடி வலைகொண்டு மீன்பிடிப்பு செய்வதால் கடலூர் மீனவ கிராமங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை எழும் நிலை உள்ளது. இதனால் இரு மாநில அரசுகளும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் நேற்று முன்தினம் மீன்வளத்துறை அதிகாரிகள், காவல்துறையினருடன் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடித்துவந்த படகுகளை ஆய்வுசெய்தனர். தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை மீறி சோனாங்குப்பத்தைச் சேர்ந்த சாரிதரன் என்பவரது படகில் 40 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணியளவு பயன்படுத்தி மீன் பிடித்துவந்தது தெரியவந்ததால், வலை மற்றும் பிடித்து வரப்பட்ட மீன்களைப் பறிமுதல் செய்ததுடன், அவர் மீது வழக்குப் பதிந்து, அரசால் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளை தடை செய்து உத்தரவிட்டனர்.
இதேபோல், கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகளை மீறி கடலூர் மாவட்டத்தில் விசைப்படகுகள் செயல்படுவதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி மீன்வளத்துறை பிறப்பித்த உத்தரவை தவறாது கடைப்பிடிக்குமாறு கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் மீனவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி கடல்சார் மீன்பிடித் தொழில் சம்பந்தமாக விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்போர் காலை 5 மணிக்கு தங்கு தளத்திலிருந்து புறப்பட்டு கடலில் மீன்களைப் பிடித்துக்கொண்டு மாலை 6.00 மணிக்குள் தங்குதளத்திற்கு வந்துவிட வேண்டும் என சட்ட விதிமுறைகளைக் குறிப்பிட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 21.8.2021 அன்று இரவு 10.30 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3 மணிவரை கடலில் மீன் பிடித்துக்கொண்டு தங்குதளத்திற்கு திரும்பிய 4 படகுகளைக் கண்காணிப்பு பணியில் இருந்த கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணைக் காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் ஆகியோர் மடக்கிப்பிடித்து,மீன்வளத் துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் விதிமுறைகளை மீறிய படகின் உரிமையாளர்களான கமால், பிரசாத், மூர்த்தி, சீதாராமன் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, படகுகளுக்கு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருளை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
.