கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). விவசாயி. இவர் அதேஊரில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு, அதனை பராமரித்து வந்தார். இந்த நிலையில் மக்காச்சோள பயிரை மயில்கள் சேதப்படுத்தியது. இதையடுத்து சந்திரன் மயில்களிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற மக்காச்சோள வயலில் குருணை மருந்தை(விஷம்) தூவியுள்ளார். இதை தின்ற ஒருபெண் மயிலும், 4 ஆண் மயில்களும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தது.
மயில்கள் வயலில் செத்துக்கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி விருத்தாசலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் ரவி தலைமையில் வனவர் பூமிநாதன், வனக்காப்பாளர் சங்கர் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து, செத்துக்கிடந்த மயில்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக இடைசெருவாய் கால்நடைமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வனத்துறையினர் வழக்குப்பதிந்து, சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பயிர்களை சேதப்படுத்திய மயில்களை சாகடித்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.