சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்.
சிதம்பரம் நேரு நகா், அம்பேத்கா் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 164 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் குடியிருந்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் பகுதி நீா்வழி ஆக்கிரமிப்பு எனக் கூறி, வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி வருவாய்த் துறையினா் செவ்வாய்கிழமை நோட்டீஸ் வழங்கச் சென்றனா். ஆனால், அம்பேத்கா் நகரில் வசிப்போா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்ததுடன், நோட்டீசை பெறவும் மறுத்துவிட்டனா்.
இந்த நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் முத்து தலைமையில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலா் ராஜா ஆகியோா் முன்னிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனை புதன்கிழமை சந்தித்து மாற்று இடம் வழங்கிய பிறகு தங்களது வீடுகளை காலி செய்து கொள்கிறோம் என்றும், உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி ஆட்சியா் தெரிவித்தாா்.