மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தில் பாரத பிரதமர் கிராம சாலை பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் ரூ.173.24 லட்சம் மதிப்பீட்டில் கஞ்சாநகரம் முதல் மங்கனூர் வரை ஆலவேளி அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு பணிகளின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மேலையூர் கிராமத்திற்குட்பட்ட மேலகாலனி தெருவில் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதையும், கருவாலக்கரை கிராமத்தில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளியின் வீட்டில் ஆட்டுக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ளதையும், செம்பனார்கோயில் பகுதியில் ரூ.21 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை நுண்ணுயிர் உரம்மாக்கும் திட்டப்பணிகளையும்,
மேலபெரும்பல்லம் கிராமத்தில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள குடிநீர் திட்டப்பணிகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மேலபெரும்பல்லம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பார்வையிட்டு இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மற்றும் சாக்குகள் கையிருப்பு போன்ற விவரங்களை கொள்முதல் நிலைய ஊழியரிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டறிந்தார்.
இவ்வாய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.மஞ்சுளா, திருமலைகண்ணன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உடனிருந்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.