கடலூர் கூத்தப்பாக்கம் நாராயணசாமி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 36), வக்கீல். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின்புற கதவு சேதமடைந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் யாரோ திருடும் நோக்கில் ராமச்சந்திரன் வீட்டின் பின்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் உடைக்க முடியாததால், அருகில் உள்ள மணிவண்ணன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.அங்கு நகை-பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்மநபர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு, பக்கத்தில் உள்ள வாசுகி என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பீரோவை நெம்பி திறந்துள்ளனர்.
ஆனால் அதிலும் நகை-பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்மநபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதில் மணிவண்ணன் வீட்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், அவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் தங்கியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.