தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்துள்ள சில புதிய கட்டுப்பாடுகளில் வழிபாட்டு தளங்களில் வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் மூன்றாம் அலை தொடங்கும் அபாயம் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசு கடந்த வாரம் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்தது, அதில் வழிபாட்டு தளங்கள் அனைத்தும் வெள்ளி முதல் ஞாயிகற்றுக்கிழமை வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும், இங்கு வருடம் தோறும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த கொரோனா காலகட்டம் தொடங்கிய முதல் இங்கு பெரிதும் திருமணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. ஆனாலும் திருமணத்திற்காக வேண்டி கொண்டவர்கள் மற்றும் முன்கூட்டியே முடிவு செய்தவர்கள் மட்டும் இங்கே திருமணம் செய்துகொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்பொழுது கொரோனா மூன்றாம் அலை தொடங்கும் அச்சம் உள்ளதால் தமிழக அரசே வாரம் மூன்று நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . ஆனால் திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோவிலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுவாமி தரிசனத்திற்கும் திருமணம் செய்வதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆடி மாதம் முடிந்து ஆவணி தொடங்கியது, அதன் காரணமாக இன்று அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள் என அனைத்து இடங்களிலும் திருமணங்கள் நடைப்பெற்று வருகின்றன.
அதனால் முன்கூட்டியே கோவிலில் திருமணம் செய்கிறோம் என்று வேண்டிக்கொண்டவர்கள் அந்த வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் தேவநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்தனர் ஆனால் கோவிலுக்குள் திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் திருக்கோவிலின் முகப்பில் நின்று ஐம்பதிற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதில் ஆண்-பெண் அனைவரும் தனிமனித இடைவெளியில்லாமல் முக கவசம் அணியாமலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தது. அனைவரும் நகரக்கூட இடம் இல்லாமல் மக்கள் ஊர்ந்து செல்வது போன்ற சூழல் உருவானதுடன் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பொழுது தான் கொரோனா இரண்டாவது அலை முடிந்துள்ளது ஆனால் அதற்குள் மூன்றாம் அலை வரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அதனை பற்றி சற்றும் சிந்திக்காமல் இவ்வாறு ஒரே இடத்தில் கூடியது தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் தற்போது அதிகரித்துள்ளதையொட்டி தமிழக-கேரள எல்லை மாவட்டங்களில் கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.