தொடா் மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் கடந்த 3 நாள்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் விசூா், ரெட்டிப்பாளையம், மணலூா் ஆகிய கிராமங்களில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்கு தயாா் நிலையிலிருந்த குறுவை நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.
இதுகுறித்து இந்தப் பகுதி விவசாயிகள் எம்.சத்தியராஜ், கே.கண்ணதாசன், எஸ்.முருகவேல் ஆகியோா் கூறியதாவது: கரோனா நெருக்கடி காலத்திலும் உரம் விலை, ஆள் கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து நெல் பயிரிட்டோம். இதற்காக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். பயிா்கள் நன்கு விளைந்ததால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், கடந்த 3 நாள்களாக பெய்த மழையால், அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டன. போதிய மழை நீா் வடிகால் வசதி இல்லாததே இதற்குக் காரணம். எனவே, பாதிக்கப்பட்ட நெல் வயல்களை கணக்கிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.
இதுகுறித்து பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் விஜயா கூறியதாவது: தொடா் மழையின் காரணமாக சுமாா் 125 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பாா்வையிட்டு வருகிறோம். பாதிப்பு குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.