கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா். இந்த இயக்கத்தினா் தன்னாா்வலா்களிடம் நிதி பெற்று அரசுப் பள்ளிகளை தனியாா் பள்ளிகள் போல சீரமைத்து வருகின்றனா். இதன்படி, புவனகிரி ஒன்றியத்தில் சொக்கங்கொல்லை அரசு தொடக்கப் பள்ளி தன்னாா்வலா்களின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது. இதேபோல, சிதம்பரம் அருகே உள்ள சாத்தப்பாடி தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளிகளிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இயக்கத் தலைவராக கயிலை செல்வா் முருகையன், செயலராக வீனஸ் அன்பழகன், பொருளாளராக ராஜசேகரன் மற்றும் பா.அருணாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் செயல்பட்டு வருகின்றனா். இந்த இயக்கத்தின் ‘குழந்தைகளை கொண்டாடுவோம்’ திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை ஒன்றியம், அம்மூபூட்டியபாளையம், சொக்கங்கொல்லை, தலைக்குளம் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு கழுத்து, இடுப்புப் பட்டைகள் (பெல்ட், டை) வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆசிரியா் தன்னாா்வலா் பா.அருணாசலம் கூறியதாவது: 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகளை எங்களது அமைப்பு தத்தெடுத்து புதுப்பிக்க உள்ளது. தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவா்கள், கிராம மக்கள் உதவியுடன் இந்தப் பணிகளை மேற்கொள்வோம். மேலும் இந்த இயக்கம் சாா்பில் வருகிற செப்.5-ஆம் தேதி ஆசிரியா் தினத்தன்று சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ‘செம்மைசீா் விருது’ வழங்கப்பட உள்ளது. மலா்ச்சி நிறுவனத் தலைவா் பரமன் பச்சைமுத்து விருதுகளை வழங்குகிறாா் என்றாா் அவா்.