பள்ளிகள் திறப்பு:
கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதால், செப்டம்பர் 1ம் தேதியான வரும் புதன்கிழமை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்களுக்குச் செயல்படும் என்று அரசு கூறியுள்ளது. 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்களை பேட்ஜ் முறையில் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
பிற வகுப்புகள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஆலோசனை:
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி சில முக்கிய பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் மட்டும் 10, 12ஆம் வகுப்புத் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. ஆனால், மாணவர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன.
பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு இன்றும், நாளையும் என 2 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், பள்ளி, கல்லூரிகளை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரகதியில் நடந்து வருகின்றன.