ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8ஆம் தேதி மாதாவின் பிறந்தநாள் கிறிஸ்தவர்களால் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 28 தேதி நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில், அதேபோல் சென்னையில் பெசன்ட் நகரில் உள்ள மாதா கோயில்களிலும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும்.
இந்த வருடம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 49வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்தார். கடந்த இரண்டு வருடமாக கரோனா பரவலை கருத்தில் கொண்டு கொடி பவனி இல்லாமல் நேரடியாக கொடி ஏற்றப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் பொதுமக்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வாகனத்துடன் வருவதை தவிர்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பெசன்ட்நகர் தேவாலயத்திற்கு வரும் மக்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். கரோனா சூழல் காரணமாக திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. திருவிழா நிகழ்வுகளை தொலைக்காட்சி அல்லது சமூகவலைத்தளங்களின் வாயிலாக நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருதலத்தத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.