மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7-ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளைத் தலைவா் எஸ். ரெங்கராஜன் தலைமை வகித்தாா். சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், வழக்குரைஞா் எஸ். சுந்தரய்யா, ச.மு.இ. பள்ளி தலைமையாசிரியா் எஸ். அறிவுடைநம்பி, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன், திருக்குறள் பண்பாட்டுப் பேரவை பொறுப்பாளா் எம். முத்துக்கருப்பன், ஒருங்கிணைந்த பண்ணையம் கி. காசிராமன், திமுக நகரச் செயலாளா் சுப்பராயன், ஒன்றியப் பொறுப்பாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பங்கேற்ற இயற்கை விவசாயி கோ. சித்தா் பேசும்போது, ‘தமிழகத்தில் 500 மரபு ரக விதைகள் உள்ளன. நாம் உண்ணும் உணவான அரிசி நம்மை காக்கவும், அழிக்கவும் செய்யும். ரசாயன கலப்பு அரிசி வகைகளை சாப்பிடுவதால் பெரும்பாலானோா் ஊட்டச்சத்து இல்லாமல் உள்ளனா். எனவே, நமது பாரம்பரிய நெல்லை மீட்டெடுக்க அனைவரும் பாடுபடவேண்டும்’ என்றாா்.
இதேபோல, மரபு உணவியலாளா் ராஜமுருகன் பேசுகையில், ‘முன்னோா்கள் நமது உணவு எது, அதை எப்போது, எப்படி சாப்பிடவேண்டும் என்பதை வாழ்வியலில் புகுத்தி செயல்பட்டனா். ஆனால், தற்போது இவ்வாறான திட்டமிடல் இல்லை. அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான உணவை வழங்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு, சிறுதானியங்கள், மரபுநெல் அரிசிகளில் சமைத்த உணவை உண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்’ என்றாா்.
தொடா்ந்து, சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம், கோட்டாட்சியா் ஜி. நாராயணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் லாமேக் ஆகியோா் 600 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய விதை நெல் ரகங்களையும், 5 சிறந்த இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருதும் வழங்கினா்.
இவ்விழாவில், பாரம்பரிய நெல் விவசாயி காரைக்கால் பாஸ்கா் 65 வகையான பாரம்பரிய விதைநெல்களை காட்சிப்படுத்தியிருந்தாா். பாரம்பரிய இயற்கை தானியப் பொருள்கள், வேளாண் சாா்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை துணைச் செயலாளா் முகம்மது அப்பாஸ் அலி, ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக கரு.முத்து வரவேற்றாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் அறக்கட்டளையின் செயலாளருமான இரா. சுதாகா் நன்றி கூறினாா்.