புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள டி.ஆர்.பட்டினத்திலிருந்து, திட்டச்சேரி வழியாக சீயாத்தமங்கை வரை ஓஎன்ஜிசி எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 10 கி.மீ தொலைவுக்கு சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு மழை பெய்து பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் பணி எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், திருவாருர் மாவட்டம் கமலாபுரம் கண்கொடுத்தவணிதம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (50) நேற்று கொரடாச்சேரியிலிருந்து நரிமணம் குத்தாலத்தில் உள்ள, மாசு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, டேங்கர் லாரியில் எஃப்யூலியன்ட் வாட்டர் எனப்படும் அதிக உப்புத் தன்மை கொண்ட நீரை ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்தார். வழியில் திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே டேங்கர் லாரியை முருகேசன் சாலையோரமாக நிறுத்தி விட்டு, சாப்பிடச் சென்றார். சாப்பிட்டு விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, டேங்கர் லாரி தண்ணீர் தேங்கி நின்ற பள்ளத்தில் சிக்கி, பாதி அளவுக்கு புதைந்த நிலையில் இருந்தது.
பின்னர், அம்மாபேட்டையில் இருந்து 2 ராட்சத கிரேன்களை கொண்டு வந்து மிகுந்த போராட்டத்துக்கு பிறகு நேற்று மதியம் டேங்கர் லாரி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதனால் நாகப்பட்டினம்-கும்பகோணம் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.