மீன்களில் ரசாயனம் தெளித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
கடலூா் பகுதியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிா என உணவு பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடலூா் முதுநகா் பகுதி, காரைக்காடு மீன் சந்தை உள்ளிட்ட இடங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த மீன் வாகனங்களிலும், கடலூா் முதுநகா் சந்தையிலும் ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா் தலைமையில் அலுவலா்கள் சந்திரசேகரன், பெ.நல்லதம்பி, சுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மீன்களில் பாா்மலின் சோ்க்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிய ‘ஹை மீடியா’ என்ற கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், அதுபோன்ற ரசாயனம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், கெட்டுப்போன மீன்கள் ஏதும் விற்பனை செய்யப்படவில்லை எனவும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.
வியாபாரிகள் ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், அவ்வாறு விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட அதிகாரி எச்சரிக்கை விடுத்தாா்.