இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய வலைகளைப் பறித்துக்கொண்டு சென்றது மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஃபைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இவர்கள் அனைவருமே கோடியக்கரை தென் கிழக்கே 12 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு 2 அதிவேக படகுகளில் சீறிக்கொண்டு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகை சுற்றிவளைத்து அச்சுறுத்தியிருக்கின்றனர். படகில் இருந்த கிருஷ்ணராஜ், வேலு, முத்துக்குமார், ரவீந்தர் ஆகிய நான்கு மீனவர்களையும், கத்தி மற்றும் சுளுக்கி கொண்டு தாக்கியுள்ளனர்.
அதோடுவிடாமல், கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு கத்திமுனையில் நாகை மீனவர்களின் படகில் இருந்த நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜிபிஎஸ் உள்ளிட்ட அனைத்து கருவிகளையும் கொள்ளையடித்ததோடு, வலைகளையும் அள்ளிச்சென்றனர். இந்தத் தாக்குதலில் மூன்று மீனவர்களுக்கு கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மீனவர்கள் பலத்த காயத்தோடு நாகை துறைமுகம் நோக்கி கரை திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் மற்றொரு சம்பவமாக, கோடியக்கரை அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான படகையும் சுற்றிவளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள், அந்தப் படகில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் பறித்துச் சென்றனர். அடுத்தடுத்து அரங்கேறிவரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் தமிழ்நாடு மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது