திருவாரூரில் 2 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உட்பட 5 மாணவர்களுக்கு கொரோனா!
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளிகள் தொடங்கி 8 நாட்களுக்குள் மாணவர்களுக்கு தொடர்ந்து தொற்று பாதிப்படைந்து வருவதால், மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவ மாணவர்கள் 2 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்று இரண்டாவது அலை படுவேகமாக பரவி தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. மூன்றாவது அலை சிறுவர்களை தாக்க கூடும் என்ற அச்சம் இருந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும், அதே போன்ற அரசு கலை கல்லூரிகளும் மருத்துவ கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பள்ளிகளில் வெப்பமானி பரிசோதனை செய்த பின்னரே மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும். வகுப்பறையில் 50 சதவிதத்தினரே அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பள்ளி தொடங்கி கடந்த ஒரு வாரம் நிறைவடைவதற்குள்ளாக திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், மன்னார்குடி அருகே முன்னாவல் கோட்டையில் 12ஆம் வகுப்பு மாணவர் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல தலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஒருவருக்கும் அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்கள் அதேபோன்று ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்ட அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கும் அதேபோன்று தலக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவர் உட்பட இன்று மட்டும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தியாகராஜன் அடியக்கமங்கலம் பள்ளியிலும், திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, தலக்காடு பள்ளியிலும் நேரில் சென்று ஆய்வு செய்து மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையையும், பள்ளி முழுமையையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியையும் துரிதப்படுத்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளிகள் தொடங்கி 8 நாட்களுக்குள் மாணவர்களுக்கு தொடர்ந்து தொற்று பாதிப்படைந்து வருவதால், மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது.