குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா!. விரைவில் குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார்!
இந்தியாவில் பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மாநிலங்களில் முதன்மையானது குஜராத். கடந்த 1998ஆம் ஆண்டு முதலே பாஜகவின் ஆட்சி தான் குஜராத்தில் உள்ளது
பிரதமர் ஆவதற்கு முன்னர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று சட்டசபைத் தேர்தல்களில் வென்று, சுமார் 12 ஆண்டுகளாகக் குஜராத் முதல்வராக இருந்தார்.
இப்படி பாஜக மிக வலுவாக உள்ள குஜராத்தின் முதல்வராகக் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தர் விஜய் ரூபானி. இந்நிலையில், 65 வயதான விஜய் ரூபானி இன்று திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் விஜய் ரூபானி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல பாஜக சார்பிலும் விஜய் ரூபானி ராஜினாமா குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
குஜராத் மாநிலத்திற்கு அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தானே முதல்வராகத் தொடரவுள்ளதாகவும் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் குஜராத் மாநில மக்களுக்கு நன்றி தெரித்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்து கட்சி தனக்கு அளிக்கும் பொறுப்பைச் சிறப்பாகச் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இன்று காலை தான் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் அகமதாபாத்தில் சர்தர்தம் பவனை திறந்த வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் விஜய் ரூபானி பங்கேற்றிருந்தார். இந்நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.