0 0
Read Time:4 Minute, 43 Second

குத்தாலம்:பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பெண்- ஆடியோவை வெளியிட்ட அதிமுகவினர்…!

பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட பெண் இறப்பதற்கு முன் குத்தாலம் பேரூராட்சி திமுக துணை செயலாளரிடம் பேசிய ஆடியோ பதிவை போலீசாரிடம் அதிமுகவினர் வழங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, வேம்பு, ராதிகா, ஜெயா ஆகிய 4 பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நான்கு பேரையும் வேலையை விட்டு நீக்கிவிட்டு திமுகவை சேர்ந்தவர்களுக்கு அந்த பணிகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மீண்டும் அந்த பணியை தங்களுக்கே வழங்க வேண்டும் என பெண்கள் கோரிவந்த நிலையில், வேலை போனதால் 2 பெண் குழந்தைகளுக்கு தாயான நதியா என்ற பெண் மனமுடைந்து கடந்த 5 ஆம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நதியா, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 9 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நதியாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக அதிமுகவினர் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில், குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நதியாவின் இறப்பிற்கு காரணமான திமுகவினர் மீதும், துணைபோன பேரூராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இறந்த நதியா தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி பேரூராட்சி திமுக துணை செயலாளர் சுந்தரராஜனிடம் முறையிடும் ஆடியோ பதிவையும் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்தனர். அந்த ஆடியோவில் வேலை இழந்ததால் தன் வாழ்க்கையே பாதித்துவிட்டதாகவும், இந்த வேலை இல்லாவிட்டால் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், திமுக கட்சிகாரர்களுக்கு வேலை வழங்குவதற்காக எங்கள் வாழ்க்கையை கெடுத்து விடாதிர்கள், கட்சி பாகுபாடு பார்க்காதிர்கள் என்று வேதனையுடன் நதியா பேசியுள்ளார். போலீசார் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வழக்கில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நதியாவின் வாக்குமூலம் மற்றும் அவரது உறவினர்களின் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் இது தொடர்பாக பேசிய மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கூறுகையில் ஏழை, எளிய மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று தமிழக முதலமைச்சர் கூறினாலும் திமுக நிர்வாகிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும், இறந்த நதியாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

source:ABP

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %