0 0
Read Time:4 Minute, 46 Second

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

’’10 பேர் கொண்ட கும்பலுடன் சதீஷை தாக்கி அவர் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை அபகரித்து சென்றதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்’’

திருவாரூர் விஜயபுரம் மேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 28 வயது இளைஞரான சதீஷ். இவருக்கு உமா என்ற மனைவியும் 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சதீஷ் திருவாரூரைச் சேர்ந்த முத்தையன் என்பவரிடம் குடும்ப செலவுக்காக தொடர்ந்து கடன் வாங்கி வந்துள்ளார். இதுவரை முத்தையனிடம் ஒன்றரை லட்ச ரூபாய் சதீஷ் கடன் வாங்கி உள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் கடந்த நான்கு மாத காலமாக கொரோனா ஊரடங்கு காரணத்தால் தொழில் சரியாக செய்ய முடியாத நிலையில் சதீஷ் முத்தையனுக்கு தரவேண்டிய மாத வட்டியை தராமல் வந்துள்ளார். இதனால் முத்தையன் தினசரி சதீஷிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பலுடன் முத்தையன் சதீஷை தாக்கி அவர் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை அபகரித்து சென்றதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகாரை ஏற்க வில்லை என சதீஷின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டிற்கு வந்த சதீஷ் தனது மனைவியும் குழந்தையும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் தனது வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சதீஷ் அவமானப்படுத்தியதால் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் அறிந்து வந்த திருவாரூர் நகர காவல் துறையினரிடம் சதீஷின் மனைவி மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாங்கள் அளித்த புகாரை ஏற்க மறுத்து கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் முத்தையனிடம் பணம் வாங்கிவிட்டு காவல்துறையினர் சதீஷின் தற்கொலைக்கு காரணமாகிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் சதீஷின் உடலை ஆம்புலன்ஸ் மூலமாக பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சதீஷ் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த சதீஷின் மனைவியும், சகோதரியும் கூறும்போது காவல்துறையினர் நாங்கள் அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முத்தையனுக்கு ஆதரவாக செயல்பட்டுவிட்டதாகவும் அவமானம் தாங்காமல் சதீஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %