நீட் தற்கொலை.. மாணவர் தனுஷ் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி.. திமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி!
சேலம்: நீட் அச்சம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், திமுக சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் மருத்து படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நீட் மூலமே கடந்த சில ஆண்டுகளாகவே நிரப்பப்படுகிறது.
இந்த ஆண்டு முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில், இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது,
சேலம் மாணவர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியிலுள்ள கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார். இவரது இரண்டாவது மகன் தனுஷ். 19 வயதான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு மேட்டூரில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் +2 படித்திருந்தார். ஏற்கனவே இவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுத்திருந்தார். மூன்றாவது முறையாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்தார். இதற்காக நேற்றிரவு வரை படித்தும் வந்துள்ளார்.
மாணவர் தற்கொலை இந்நிலையில் அச்சம் காரணமாக மாணவர் தனுஷ், இன்று அதிகாலை வீட்டின் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், உயிரிழந்த மாணவர் தனுஷின் உடல் அவரது சொந்த கிராமத்தில் பொது மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
உதயநிதி அஞ்சலி உயிரிழந்த மாணவர்களுக்குப் பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த தகவல் தெரிந்ததும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி சேலம் சென்றார். கூழையூர் கிராமத்தில் மாணவர் தனுஷின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி, மாணவரின் பெற்றோருக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், திமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவியும் அளித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திப் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
உதயநிதி பேட்டி பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு நிரந்தரமாக வேண்டாம், நீட் தேர்வால் ஒட்டுமொத்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தான் திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், இதற்கு முயற்சி எடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தோம். இதுபோல் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புதிய சட்ட மசோதா ஏற்கனவே இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது . திமுக ஆட்சிக்கு வந்து 120 நாட்கள்தான் ஆகிறது. குறுகிய காலத்தில் சட்ட போராட்டம் நடத்த இயலவில்லை. இது தொடர்பாகச் சட்டசபையில் மீண்டும் மசோதா நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் பேசி ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம்.
இது ஒரு மாணவரின் பிரச்சனை மட்டுமல்ல, எல்லாம் வீட்டு மாணவர்களின் பிரச்சனையாகும், எல்லாம் அரசியல்வாதிகளின் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தான் நீட் தேர்வு நிச்சயம் வேண்டாம் எனத் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். திமுக ஆட்சி மாணவர்களுக்குத் துணையாக இருக்கும், எனவே மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை, யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்” என்று அவர் தெரிவித்தார்.
ஈபிஎஸ் சாடல் முன்னதாக மாணவர் தனுஷின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். நீட் தேர்வு தொடர்பாகச் சரியான பதிலைக் கூறி அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்ப்படுத்தி, நன்மதிப்பென் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுசை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாகச் சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்? என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று பொய் வாக்குறுதி கூறிய திமுக அரசின் வாய்ச்சவடாலால் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.