நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்!. இன்றுடன் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிகிற நிலையில் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர்!.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகி போகிறது.
இதனால் இந்த தேர்விலிருந்து விலக்கு கோரி கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் நீட் தேர்வு நடத்தப்படாமல் நேற்றைய தினம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் கோழையூர் மாணவர் தனுஷ் தேர்வு எழுத செல்வதற்கு முன்பே தற்கொலை செய்து கொண்டார்.
இவருடன் சேர்த்து இத்துடன் 15 மாணவர்கள் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறார். இந்த தீர்மானம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கிவிட்டால் நீட் தேர்வு ரத்தாகிவிடும். மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்தும் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.