கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட நண்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் (வயது 38). கடந்த 2019- ஆம் ஆண்டு அரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய அண்ணன், தம்பிகளுக்குள் பாகப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இவருடைய பெயரில் பட்டா மாறுதல் செய்வதற்காகக் காட்டுக் கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளியிடம் அணுகி உள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாறுதல் செய்வதற்கு ரூபாய் 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். 10,000 தரமுடியாது என்று அரிகிருஷ்ணன் கூறியவுடன் 2,000 குறைத்துக் கொண்டு 8,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து அரிகிருஷ்ணன், கடலூரில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த ரசாயனம் தடவிய 8,000 ரூபாய் பணத்தை வி.ஏ.ஓ. செண்பகவள்ளியிடம் நேற்று நேரில் வழங்கினார் அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜாசிங், ஆய்வாளர்கள் சண்முகம், திருவேங்கடம் உள்ளிட்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்து கிராம நிர்வாக அலுவலர் செண்பகவள்ளியை கைது செய்து கடலூர் அழைத்து சென்று அவரை சிறையில் அடைத்தனர்.
விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கிராம நிர்வாக அலுவலர் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.