உள்ளாட்சி தேர்தல்: மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு- கமல்ஹாசன்!.
வேட்புமனுத் தாக்கல் செய்ய செப்டம்பர் 22-ந் தேதி கடைசிநாள். கடந்த 4 நாட்களில் 20,074 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு காலியாக உள்ள பதவிகளுக்கு அக்டோபர் 9-ல் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய செப்டம்பர் 22-ந் தேதி கடைசிநாள். கடந்த 4 நாட்களில் 20,074 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
பாமக தனித்து போட்டி இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பா.ம.க.விலகி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. அதேபோல் அமமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவையும் தனித்தே போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் இடப் பங்கீடு விவகாரங்கள் மாவட்ட அளவில் பேசி பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருக்கிறது.
தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் மேலும் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொத்தம் 128 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். ஆனால் தமது பெயரையோ ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்த தடை விதிக்க கோரி தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
தேர்தல் பார்வையாளர்கள் இதனிடையே இந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம்- அமுதவல்லி, செங்கல்பட்டு- சம்பத், விழுப்புரம்- பழனிசாமி, கள்ளக்குறிச்சி- விவேகானந்தன், வேலூர்- விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை -மதுமதி, திருப்பத்தூர்- காமராஜ், நெல்லை- ஜெயகாந்தன், தென்காசி- சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Source:ThatsTamil