0 0
Read Time:2 Minute, 30 Second

ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் அட்டூழியத்தில் ஈடுபடுவதால் மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் காலனியை சேர்ந்தவர் அருட்செல்வன்(வயது 43). இவருக்கு சொந்தமான படகில் அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன்(40), நல்லதம்பி(40), மரியதாஸ்(22), அருள்ராஜ்(24) ஆகிய 4 மீனவர்களும் ஆறுகாட்டுத்துறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் இரவு 11 மணியளவில் மணியன்தீவு கடற்கரைக்கு கிழக்கே சுமார் 15 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 5 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகில் ஏறி தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி அவர்களை மிரட்டினர். பின்னர் படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவி, வாக்கிரூடாக்கி, செல்போன், டார்ச்லைட்கள், சிக்னல் லைட்கள், 500 கிலோ வலைகள் உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதை தொடர்ந்து நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள், இதுகுறித்து ஆறுகாட்டுத்துறை பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளையடித்து செல்லும் சம்பவத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %