மயிலாடுதுறையில் 10 நிமிடம் மழை பெய்தாலே கண்ணாரத்தெரு, கச்சேரி சாலை சந்திப்பு, காந்திஜிசாலை, முத்துவக்கீல் சாலை சந்திப்பு, பட்டமங்கலத்தெரு ஜெமினி கார்னர், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் எதிரில் என நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகவும் இடைஞ்சலாக இருந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் சாலைமற்றும் வீதிகளின் ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகாலை சரியாக பராமரிக்காததுதான், குறிப்பாக மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் 5 நிமிடம் மழைகே மழைநீர் தேங்கி மக்கள் நடக்க முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கிவிடும்.
அதேபோல கண்ணாரத் தெரு முக்கூட்டிலிருந்து கச்சேரிசாலைக்கு செல்லும் வழியிலும் மழைநீர் வடிகால் தூர்வாராததால் 5 நிமிட மழைக்கே மழைநீர் தேங்கி வாகனத்தில் மக்கள் செல்ல முடியாத நிலைக்கு ஆளாக்கி வருகிறது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் அவர்கள் அதை காதில் வாங்கி கொள்வதேயில்லை, அதிகாரிகள்தான் மாறுகிறார்களே தவிர அலட்சியம் மாறவில்லை. இதைக் கேள்விப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில் நேற்று தூய்மைப்பணி முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து கலெக்டர் லலிதா கூறுகையில், அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நேற்று முதல் 25ம்தேதி வரை மாபெரும் தூய்மை பணி முகாம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கச்சேரி சாலையில் உள்ள கண்ணார தெருவில் சாலையோர வடிகால் வாய்க்கால் தூய்மை பணியாளர்கள் மூலம் தூர்வாரப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளின் மூலம் குடியிருப்பு பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் சூழாமலும்,மழைநீர் தேங்கி நிற்காத வகையில் முழுமையாக தூர்வாரிட அனைத்து நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.