நாகையில், குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் சுற்றியிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து காட்டில் விட்டனர்.
நாகை வெளிப்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் உமாநாத். இவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டை சுற்றி ஏராளமான செடி, கொடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்து உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் விஷ பூச்சிகளின் தொல்லை இருந்தது. நேற்று சந்தியா தனது 10 மாத பெண் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து தொட்டிலை ஆட்டிக்கொண்டு இருந்தார். அப்போது ஓட்டு வீட்டின் மேற்கூரை வழியாக வீட்டினுள் 10 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இறங்கியது. இந்த பாம்பு குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டிலின் கயிற்றில் தனது உடலை முழுவதும் சுற்றிக்கொண்டு அப்படியே இருந்தது. இதை கவனிக்காமல் சந்தியா தொட்டிலை ஆட்டிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மேலே பார்த்தார்.
அந்தரத்தில் தொட்டில் கயிற்றில் நீளமான பாம்பு பின்னி பினைந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தியா தனது குழந்தையை தொட்டிலில் இருந்து வெளியே எடுத்து தூக்கிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தொட்டில் கயிற்றில் சுற்றிக்கொண்டு இருந்த சாரை பாம்பை நவீன கருவி மூலம் லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டனர். குழந்தை தூங்கி கொண்டிருந்த தொட்டில் கயிற்றில் சுற்றி இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்த சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.