மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழைபெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் நேற்று காலை 6.30 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ள நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன. மயிலாடுதுறை அருகே மணக்குடி அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை சூழ்ந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விற்பனைக்காக கொண்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வருகிறது. நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தமிழக அரசு ஆண்டுதோறும் குறுவை நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஊராட்சி தோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு வைத்தீஸ்வரன் கோவில், செம்மங்குடி, கதிராமங்கலம், ஆத்துக்குடி, வள்ளுவக்குடி, பச்சமாதானம், அகர எலத்தூர், இளந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தினமும் 800 முட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியாமல் உள்ளது. இதனால் நெல் மூட்டைகளுடன் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை கொள்முதல் நிலையங்களில் காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதி, மற்றும் தார் பாய், சிமெண்ட் தளங்கள் இல்லை. இந்த நிலையில் சீர்காழி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வைத்தீஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து முளைத்து வருகிறது. மேலும் மழையால் கொள்முதல் நிலையம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இனிவரும் காலங்களிலாவது தினமும் கூடுதலாக 1,500 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 கூடுதலாக கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும். இல்லை என்றால் வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read Time:4 Minute, 1 Second