உணவு தயாரிக்கும் கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் மயிலாடுதுறையில், ஓட்டலை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பழைய இறைச்சி மற்றும் காலாவதியாக உணவு பொருட்களை விற்பனை செய்த கடை, ஓட்டல் உரிமையாளர்களுக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை பகுதியில் கடைகள் மற்றும் ஓட்டல்களில் காலாவதியான உணவுபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அசைவ ஓட்டல்களில் தரமற்ற கறிகள் பயன்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், நகர்நல அலுவலர் மலர்மன்னன் மற்றும் அதிகாரிகள் நேற்று மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிறுத்தம், ஸ்டேட் பேங்க் ரோடு, காந்திஜிரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை, குளிர்பான கடைகள், அசைவ ஓட்டல்களில் திடீரென சோதனை நடத்தினர். இதில் அசைவ ஓட்டல்களில் பழைய கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் போன்றவை குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பழைய இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் காந்திஜி சாலையில் உள்ள ஒரு அசைவ ஓட்டலில் பழைய இறைச்சி மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் கூடம் இருந்ததால் அந்த ஓட்டலை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். பழைய இறைச்சி மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் வைத்திருந்த கடை, ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் பாலு கூறுகையில், கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களுக்கும், உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டுமே அதனை வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும். தேதி குறிப்பிடப்படாமல் உணவுபொருட்களை பாக்கெட்டுக்களில் போட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு அபராதம் விதிக்கப்படும்.
ஓட்டல்களில் உணவு தயாரிப்பு கூடங்களை சுகாதாரமான முறையில் வைத்துகொள்ள வேண்டும். அசைவ ஓட்டல்களில் தினந்தோறும் இறைச்சிகளை வாங்கி உணவு தயாரிக்க வேண்டும். கெட்டுப்போன இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.