கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், கடந்த 2003 ஆம் ஆண்டு இருவேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் ஆணவ கொலை வழக்கு தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 13 பேர் குற்றவாளிகள் என, கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன் – கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், இருவரும் ஊரைவிட்டுச் சென்று வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ளனர்.
திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் கண்டுபிடித்து கொண்டு வந்து புதுக்கூரைப்பேட்டை முந்திரித்தோப்பில் இருவருக்கும் விஷம் கொடுத்து எரித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து, விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 2004-ம் ஆண்டு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து இன்று (செப். 24) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.