உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுப்பது, வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பது, மத்திய காவல் படையை பணியமர்த்துவது, தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாநிலத்தில் பிரதான கட்சி என்ற முறையில் அதிமுக அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மனுதாரருக்கு செப்டம்பர் 29க்குள் தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.