கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 36 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து கடலூர், நல்லூர் வந்த 2 பேருக்கும், நோய்த்தொற்று பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 4 பேருக்கும் , கொரோனா பாதிக்கப்பட்ட வர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 61 ஆயிரத்து 953 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 16 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இது வரை 855 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 2 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் புதுஉப்பலவாடியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 59). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவருக்கு சம்பவத்தன்று உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதை கண்டறிந்தனர். இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் கடலூரை சேர்ந்த 73 வயது முதியவரும் கொரோனா பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். ஆனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த விவரம் நேற்றைய புள்ளி விவர பட்டியலில் இடம் பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதித்த 286 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 67 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.