0 0
Read Time:4 Minute, 17 Second

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் 3-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மேல்புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் தடுப்பூசி முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேல்புவனகிரியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், ராஜசேகர், ரவிச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக, தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. மேலும் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க முதல்-அமைச்சர் உத்தரவுபடி பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் இரண்டு மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நாளை (அதாவது இன்று) 3-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனால் விடுபட்ட மற்றும் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து 100 சதவீதம் இலக்கினை அடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்காலங்களில் தாழ்வான நீர்த்தேங்கும் பகுதிகள், பாதாள சாக்கடைகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் தூய்மை பணி முகாம் தொடங்கி வைக்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.

மேலும் வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை அடையும் விதமாக ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 100 மரக்கன்றுகள் நட, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புனிதா, விஜயலட்சுமி, கடலூர் மாவட்ட செயற்பொறியாளர் தணிகாசலம், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சுந்தரவடிவு, டாக்டர்கள் முத்துக்குமரன், அருண்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தனசேகரன், குணசேகரன், ஒன்றிய பொறியாளர் சுரேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய கணக்கர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %