இன்று கரையைக் கடக்கவுள்ள ‘குலாப் புயல்’! தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. விவரம்!
கடலின் சில பகுதிகளில் திடீரென்று குறைந்த காற்றழுத்தம் ஏற்பட்டு வேகமான காற்றும், மேகமும் சூழ்ந்திருப்பதை புயல் என்று அழைக்கிறோம். இந்தியாவில் மழைக்காலத்திற்கு முன்பும் அதற்கு பின்பும் மிக பயங்கரமான புயல் உருவாகிறது.ஆந்திர பிரதேசம், ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரைப் பகுதியில் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் சில நேரங்களில் ஏப்ரல்-மே மாதங்களிலும் புயல் உருவாகிறது.
குலாப் புயல்:
கிழக்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டது. இது, சூறாவளி புயலாக (குலாப்) உருவாக வாய்ப்புள்ள நிலையில், இன்று மாலைக்குள் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை இது கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 75-85 கி.மீ-ல் இருந்து 95 கி.மீ வரை இருக்கும்.
ஆந்திரா/ ஓடிசா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவில் கஞ்சம் மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களை இது பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த 6 மணி நேரத்தில், வடமேற்கு நோக்கி மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் கரையோய்க் கடக்கும்.
இந்த மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை 18 குழுக்களை நியமித்துள்ளது மேலும் கூடுதல் அணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் கப்பல்கள் மற்றும் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
உயிர்ச்சேதத்தை முற்றிலும் தடுத்தல் மற்றும் சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தை குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மத்திய முகமைகளும் உதவ தயாராக உள்ளன என்று மாநில அரசுகளுக்கு அமைச்சரவை செயலாளர் உறுதியளித்தார்.
மின்சாரம், தொலைத் தொடர்பு ஆகிய அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் சேவைகளை விரைவில் தொடர அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
தமில்நாட்டின் தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா , தென்மேற்கு வளைகுடா பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்