கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து பொது நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதில் ஏராளமான முறைகேடுகள் இருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகைக்கடன்களையும் 100 விழுக்காடு ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு தற்போது குழு அமைத்துள்ளது.
இந்த ஆய்வுக்குழு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பெறப்பட்ட நகைக்கடன்களை ஆய்வு செய்யும். இதில், கூட்டுறவு சார் பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை நவம்பர் 15ஆம் தேதிக்குள் முடித்து மண்டல இணைப்பதிவாளருக்கும், சென்னை மண்டல ஆய்வறிக்கைகளை கூடுதல் பதிவாளர் பெற்று கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இவை அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு நவம்பர் 20ஆம் தேதிக்குள் பதிவாளருக்கு அனுப்பி வைக்குமாறும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.