சிதம்பரம் காந்தி சிலை அருகே இராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை துறை சார்பாக சர்வதேச செவித்திறன் மாற்றுத்திறனாளி வாரம் கொண்டாடப்படுவதையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று (26.09.2021) நடைபெற்றது. பேரணியை சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கிவைத்தனர்.
இதில் காது, மூக்கு, தொண்டை துறை இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிதம்பரம் நகரத்தின் முக்கிய வீதியான மேலவீதி, வடக்குவவீதி, தெற்குவீதி, கீழவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி சமூகங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், சைகை மொழிகள் உள்ளன என்பதை அங்கீகரிக்கவும் அவர்களின் உரிமைகளை விளக்கவும், சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கவும் சர்வதேச செவித்திறன் மாற்றுத்திறனாளி வாரம் செப்டம்பர் மாத இறுதியில் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடத்திற்கான மையப் பொருளானது செவித்திறன் மாற்றுத்திறனாளி சமூகங்களைக் கொண்டாடுவது, சைகை மொழிகள், உரிமைகள், தடுப்பு முறைகள் மற்றும் அரசின் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் லாவண்யாகுமாரி, துறைத்தலைவர் பாலாஜி சுவாமிநாதன், துறை பேராசிரியர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேரணி செல்லும் இடங்களில் சிதம்பரம் நகர காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து மருத்துவ மாணவர்களுக்கு உதவினர்.