மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் முதலைமேடு, எருக்கூர், கொள்ளிடம் ,கடவாசல், ஆகிய இடங்களில் வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன.இம்மையங்களில் குறுகிய கால நெற்பயிர்களுக்கான விதை நெல் மட்டும் இருப்பில் உள்ளது.4மாத அல்லது நீண்டகால நெற்பயிருக்குரிய விதைநெல் வகைகளான சொர்ணாசப்,கோ46 மற்றும் ஆடுதுறை 38 ஆகிய ரக விதை நெல் கிடைக்காததால் விவசாயிகள் நேரடிநெல் விதைப்பு பணியை துவங்க முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும் கடைமடை பகுதிகளில் மழையை நம்பி விவசாயம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயிகள் நீண்டகால நெல் விதைகளை வாங்குவதற்கு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் கடைகளை தேடி அலைந்த வண்ணம் இருந்து வருகின்றனர். ஆனால் தற்போது விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் வாங்க நினைக்கும் நீண்ட கால நெல் விதைகள் கிடைக்கவில்லை.
தற்போது விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு செய்ய தீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில் போதிய நெல் விதை கிடைக்கவில்லை என்றால் பருவத்திற்கேற்றபடி நெல் விதைப்பு செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே விவசாயிகள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் கொள்ளிடம் கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு போதிய விதை நெல் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொள்ளிடம் பாரம்பரிய நெல் விவசாய சங்க தலைவர் காமராஜ் தெரிவித்தார்.