பஞ்சாப் அரசியலில் புதிய பரபரப்பு- காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத்சிங் சித்து!
சண்டிகர்: பஞ்சாப் அரசியலில் காங்கிரஸ் கட்சிக்குள் செய்ய கூடாத வேலையெல்லாம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து
அதேநேரம் காங்கிரஸ் கட்சியில் தொடருவேன் என்று கூறியுள்ளார். ஆனால், இவரை மலை போல நம்பி, அம்ரிந்தர் சிங்கை பகைத்துக் கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய காங்கிரஸ் இளம் தலைவர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது சித்து செய்த இந்த ஸ்டன்ட்.
கடந்த சில ஆண்டுகளாகவே, ராகுல் காந்தி பெரிதாக நம்பியவர்கள் எல்லோரும் காலை வாரியுள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பஞ்சாப்பில் சித்துவும் இப்போது அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்.
தலைவராக அமரிந்தர் சிங் பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் வலுவான ஒரு பிராந்திய தலைவராக இருந்து வந்தார். ஆனால் அவருக்கு எதிராக சித்து தலைமையில் கோஷ்டி உருவானது. இதனால்தான், 10 நாட்கள் முன்பாக தனது முதல்வர் பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார்.
சித்து குழப்பம் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 40 எம்எல்ஏக்கள், கேப்டன் அமரிந்தர் சிங் தலைமை மீது அதிருப்தி தெரிவித்தும் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறியும் கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதன் பின்னணியில் சித்து இருந்தார். மேலும் பகிரங்கமாகவும் அமரிந்தர் சிங்கை விமர்சனம் செய்து வந்தார்.
காங்கிரஸ் தலைவர் சித்து கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி காங்கிரஸ் மாநில தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்தில் அமரிந்தர் சிங்கிற்கு விருப்பம் இல்லை. இத்தனைக்கும் பாஜகவிலிருந்து வந்து காங்கிரசில் சேர்ந்தவர்தான் சித்து. எனவே, சோனியா காந்திக்கு அமரிந்தர் சிங் கடிதம் எழுதி அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்படியும் கூட, அதை சோனியா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில், நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் தலைவரானதால் அமரிந்தர் சிங் அதிருப்திக்குள்ளாகினார்.
பஞ்சாபில் சட்டமன்ற தேர்தலுக்கு 4 மாதங்களே இருக்கும் நிலையில், புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி, தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அமரிந்தர் சிங் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்று, பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைமைக்கு பக்க பலமாக இருக்க வேண்டிய சித்து, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.