மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம், திட்டை, சீர்காழி, திருவெண்காடு, மணிக்கிராமம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா ஆய்வு செய்தார்.
சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு தினசரி வழங்கும் சத்துணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கட்டறிந்தார். தொடர்ந்து சட்டநாதபுரம் ஊராட்சியில் வடக்கு தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், திட்டை ஊராட்சியில் செயல்பட்டு வரும் கார்டன் மனநல காப்பகத்தையும் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆய்வு செய்து, அங்கு அரசின் விதிமுறைகளின்படி மனநல காப்பகம் முறையாக நடத்தப்படுகிறதா, காப்பகத்தில் உள்ளவர்களுக்கு முறையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் திட்டை ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், சீர்காழி நகராட்சி பகுதியில் இயங்கிவரும் காளான் வளர்ப்பு பண்ணையையும், திருவெண்காடு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் காத்திருப்போர் அறை கட்டப்பட்டுள்ளதையும், மணிக்கிராமம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மணிக்கிராமம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மரக்கன்று நட்டுவைத்தார். இவ்வாய்வின்போது சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.அருள்மொழி, கஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.