தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலின் போது திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவும், எஞ்சியவையும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வத்தல்மலை மலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2,116 பயனாளிகளுக்கு சுமார் 16 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலதிட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சியையும், வத்தல்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து, மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பழங்குடியின மக்களை ஒருபோதும் தாம் வேறுபடுத்தி பார்த்ததில்லை என்றார். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலம் வசதிபடைத்தவர்கள், பணம் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல முடியும் என்ற நிலையை மாற்றியிருப்பதாக தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறினார்.