இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது தாக்குதால் நடத்தி வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்வதை கண்டித்து கடந்த 4 நாட்களாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதை கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாகை மாவட்டத்தை சேர்ந்த 24 கிராம மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் மீனவர்களிடம் அளித்தனர்.
இந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பைபர் படகில் மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதை தொடர்ந்து மாலையில் மீனவர்கள் கரை திரும்பினர்.
மீனவர்களின் வலையில் மத்தி மீன்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் மீன் வாங்க வியாபாரிகள் வராததால் மீனின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் ஒரு கிலோ மத்தி மீன் ரூ.140-க்கு விற்ற நிலையில் நேற்று ரூ.50 முதல்ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கொய் மீன் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டது. பின்னர் வியாபாரிகள் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்தி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.4 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு மத்தி மீன்கள் மட்டும் கிடைத்த நிலையில் சரியான விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். டீசல் செலவிற்குக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.