மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கிளியனூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த்துறையில் ஆசிரியராக மகேந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி மதியம் மகேந்திரன் வகுப்பில் படிக்கக்கூடிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆகாஷ், சுதர்சன், ஹரிஷ், சஞ்சய் ஆகியோர் ஆசிரியரை கிண்டல் செய்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் அந்த மாணவர்களை ஆசிரியர் திட்டி அடித்து உள்ளதாக கூறப்படும் நிலையில் அன்று இரவு பெற்றோர்களிடம் மாணவர்கள் இச்சம்பவத்தை கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் கலிவரதனிடம் ஒன்னாம் தேதி வெள்ளிக்கிழமை நேரடியாக சென்று புகார் கொடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த தமிழாசிரியர் மகேந்திரன் மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போகவே ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலித்தை தமிழ் ஆசிரியர் மகேந்திரன் தாக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆசிரியருக்கு சிறிது காயம் ஏற்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல் ஆய்வாளர் சிவதாஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு நேரடியாக வந்த அதிகாரிகள் இருதரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் முன் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் , பெற்றோர் மற்றும் ஆசிரியர் என இரு தரப்பினரும் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.