வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதால் மற்ற பிரிவினருக்கு பாதிப்பில்லை: உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு!
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரபட்டன.
இந்த வழக்குகளுக்கு பதில் அளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 1993-ல் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு சட்டத்தின்படி, பட்டியலினத்தவருக்கு 18 சதவீதம், பழங்குடியினத்தவருக்கு ஒரு சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு 20சதவீதம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.
இதில், எம்.பி.சி. இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரின்அறிக்கையின் அடிப்படையிலும், மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையிலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினருக்கு 7 சதவீதமும், பிற பிரிவினருக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கான இந்தஉள்இடஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தைஅமல்படுத்த தற்போதைய அரசுஉத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்,இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது தெளிவாகும். இந்த உள் ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியகுல சத்ரியர் பிரிவில் 7 சாதியினர் உள்ளனர்.
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்யலாமா, வேண்டாமாஎன்பதை ஆய்வு செய்யவே அமைக்கப்பட்டது. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.