மயிலாடுதுறை நகராட்சியில் இன்று முதல் மாபெரும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் சுழற்சி முறையில் மாபெரும் தூய்மை பணிகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியின் போது, சாலையோரம் உள்ள குப்பைகள் 100 சதவீதம் அகற்றப் படுவதோடு, தூர்ந்து போன மழைநீர் வடிகால்கள், புதை சாக்கடை கழிவு நீர் வெளியேறுவது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். நாளொன்றுக்கு குறைந்தது 3 வார்டுகள் என்ற அடிப்படையில் வாரத்துக்கு 3 நாள்கள் என அக்டோபர் 30-ம் தேதிக்குள் இப்பணி முழுமையாக நிறைவடையும். இப்பணி நடைபெறும் நாள்களில் தொடர்புடைய வார்டுகளுக்கு நகராட்சி , பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகளுடன் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்கவுள்ளேன்.
இப்பணியின்போது, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பரிசோதனைகளும், நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனங்கள் மூலம் விடுபட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.