மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டு இந்த ஆண்டு அனைத்து மாதமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பவள விழாவின் மூன்றாவது மாத விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. பவள விழா நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமை வகித்து அருளாசி வழங்கிப் பேசினார்.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், 100 மாணவிகளுக்கான தையல் பயிற்சியினை துவக்கி வைத்து பயிற்சி நிறைவு பெற்ற மாணவிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில் தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவியேற்ற முதல்நாள் தொடங்கி சிறப்பாக பணியாற்றி வருவதுபோல், தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் பீடம் அமர்ந்த நாள்முதல் சைவத்துக்கும், தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றி வருகிறார்.
இந்தியாவில் உள்ள சைவ ஆதீனங்களிலேயே முனைவர் பட்டம் பெற்ற ஒரே ஆதீனமாக 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் விளங்குகிறார் என்றார்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கல்லூரியில் 1988 முதல் 2016 வரை படித்த வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் வணிகவியல் துறைக்கு அமைத்துத் தந்த ஸ்மார்ட் வகுப்பறையினைத் திறந்துவைத்து வாழ்த்துரை வழங்கி பேசினார்.
தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அறிவுடைநம்பி ‘இல்லங்கள் தோறும் திருக்குறள்” திட்டத்தின்கீழ் மாணவர்களுக்குத் திருக்குறள் நூலை வழங்கி பேசினார். இதில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், கல்லூரியின் செயலாளர் முனைவர் செல்வநாயகம் கல்லூரியின் முதல்வர் சுவாமிநாதன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.