மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விசலூரில் கிராம நியாய விலை கடைக்கு என புதிய கட்டிடம் கடந்த ஆட்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையிலும் அங்கு நியாய விலை கடை செயல்படாமல் சேந்தமங்கலத்தில் உள்ள பழைய தனியார் வாடகை கட்டிடத்திலேயே செயல்படுவதாகவும் விசலூர், பத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் விசலூர் கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று பொருள்கள் பெற முடியாத நிலை உள்ளதாகவும், நியாய விலை கடைக்கென்று புதிய கட்டிடம் விசலூரில் கடந்த ஆட்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ் பவுன்ராஜ் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்டு இரண்டு மாத காலங்கள் வரை பயன்பாட்டில் இருந்த கட்டிடம் ஆட்சி மாற்றத்தால் அந்த கட்டிடத்தில் செயல்படாமல் சேந்தமங்கலத்தில் தனியார் இடத்தில் நியாய விலை கடை செயல்படுவதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் விசலூர் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் சங்கரன்பந்தல் கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசலூர் கிராம மக்கள் அரசு உயர் அதிகாரிகள் வராததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ் குமார் மற்றும் பொறையார் காவல் துறையினர் விசலூர் மற்றும் பத்தாம் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை நடத்திய மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மங்கைநல்லூரில் இருந்து பொறையார் செல்லும் முக்கிய சாலை சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.