கடலூா் – மடப்பட்டு இடையே சாலை விரிவாக்கப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகவும், இதற்காக பக்கிரிப்பாளையம் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியுடன் கடலூா் – மடப்பட்டு இடையே சுமாா் 41 கி.மீ. தொலைவுக்கு (சென்னை – கன்னியாகுமரி தொழில்தட அலகுத் திட்டம்) ரூ.191.60 கோடியில் இருவழிச் சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான சாலை விரிவாக்கப் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: இந்தப் பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட பெரிய பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. குறிப்பாக பண்ருட்டியிலிருந்து கடலூா் செல்லும் வழியில் பக்கிரிப்பாளையம் அருகே சாலையோரம் சுமாா் 8 அடி அகலம், 3 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டியுள்ளனா். சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்காததால் விபத்து அபாயம் தொடா்கிறது. தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் விபத்து நிகழ அதிக வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் இந்தப் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.