உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்து படிப்படியாக வழக்கமான ரயில் போக்குவரத்தை ரயில்வே துறை தொடங்கி வருகிறது. புரட்டாசி மாதம் என்பதால், பக்தர்கள், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி கொரோனா தொற்றால், நிறுத்தப்பட்ட ரயில் சேவையை இயக்கிட வேண்டும் என்று கும்பகோணம், தஞ்சாவூரை சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், வணிக ரீதியாகவும், இந்த ரயில் சேவை இருந்ததால், பயணிகள் மற்றும் வணிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்ற ஹைதராபாத்-ராமேஸ்வரம் ரயிலை கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக மீண்டும் இயக்க தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து திருப்பதி, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செகந்திராபாத் – ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் வரும் 19 ஆம் முதல் இயங்க தொடங்குகிறது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 07685) இந்த ரயில் குண்டூர், திருப்பதி (புதன் காலை 10.00 மணி), திருவண்ணாமலை வழியாக புதன்கிழமை மயிலாடுதுறை (மாலை 6.45), கும்பகோணம் (இரவு 7.15) தஞ்சை (இரவு 8.25) மணிக்கு வந்து திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக வியாழன் அதிகாலை 3.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறு மார்கத்தில் வண்டி எண். 07686 வியாழன் இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை தஞ்சை காலை 6.10 கும்பகோணம் காலை 6.45 மயிலாடுதுறை 8.00 மணிக்கு வந்து திருவண்ணாமலை, திருப்பதி (மாலை 5.00 மணி) குண்டூர் வழியாக சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட மெயின் லைன் பயணிகள் ஆந்திர மாநிலம் ஓங்கோல், குண்டூர், தெனாலி செகந்திராபாத் ஆகிய இடங்களுக்கு நேரடி ரயில் வசதியும் திருவண்ணாமலை, திருப்பதி, நெல்லூர், ஆகிய இடங்களுக்கு கூடுதல் ரயில் வசதியும் கிடைத்துள்ளது.
இது குறித்து செயலாளர் கிரி கூறுகையில், ஹைதராபாத்-ராமேஸ்வரம் ரயிலில் 18 பெட்டிகள் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணத்திலிருந்து 500க்கும் பயணிகள்சென்று வந்தனர். ஆந்திரா மாநிலம், குண்டூர், பெனாலி, நெல்லுாருக்கு வணிகர்கள் சென்று வந்தனர். இதனால் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. ஹைதராபாத்திற்கு கொரோனா தொற்று காலத்தின், இயக்குவதால், ஐடி நிறுவனத்திற்கு செல்பவர்கள், மாநிலம் தலைநகரமாக இருப்பதால், கல்வியாளர்களும், பல்வேறு வேலை நிமித்தமாகவும் சென்று வருவார்கள்.
காவிரி டெல்டா மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானவர்களின் உறவினர்கள், நண்பர்கள், இருப்பதால், அவர்கள் சென்று வர சுலபமாக இருக்கும். மேலும், 108 வைணவ கோயில்களில் பெரும்பாலானவைகள், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகமாக இருப்பதால், ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி செல்பவர்கள், இப்பகுதிக்கு வரும் போதோ அல்லது செல்லும் போதோ, கோயில்களில் தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இதனால் ஹைதராபாத்-ராமேஸ்வரம் ரயில் டிக்கெட் நிரம்பி செல்லும் என்றார்.