கேரளாவில் வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்தனர். 13 பேர் கோட்டயத்திலும், ஒன்பது பேர் இடுக்கியிலும் மற்றும் நான்கு பேர் ஆலப்புழா மாவட்டத்திலிருந்து இறந்துள்ளனர்.
இராணுவம், என்டிஆர்எஃப், காவல்துறை மற்றும் தீயணைப்பு படை உள்ளூர் மக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொக்காயர் ஆகிய இடங்களில் மீட்புப் பணிகளைத் தொடங்கின. இடிபாடுகளில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
அதிகாரிகள் கூறுகையில், மீட்புப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மேலும் ஐந்து சடலங்களை கூட்டிக்கல்லில் இருந்து மீட்டனர். உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றனர்.
13 பேர் பலி கோட்டயம் மாவட்டம், கூட்டுகல் அருகே பிலாபள்ளி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளில் 13 பேர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அனைவரும் மண்ணில் புதைந்தனர். அந்த பகுதியில் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 6 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இடுக்கி இடுக்கி மாவட்டம், கொக்கையாறு அருகே உள்ள பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கும் 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர். மேலும், 10க்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இடுக்கி மாவட்டத்தில் ஆன்சி என்ற பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் அடித்து செல்லப்பட்டது. இதில் இருந்த வாலிபரும், இளம்பெண்ணும் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். இருவர் சடலங்களும் மீட்கப்பட்டன.
மீட்பு பணி நிவாரணப் பொருட்களுடன் கடற்படை ஹெலிகாப்டர் ஐஎன்எஸ் கருடாவில் இருந்து கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஷங்குமுகத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் இரண்டு எம்ஐ -17 ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தயாராக உள்ளன.
பேரிடர் மீட்பு படை கண்ணூரில் உள்ள டிஎஸ்சி மையத்திலிருந்து பொறியியல் மற்றும் மருத்துவக் குழுக்களுடன் ராணுவ வீரர்களின் படைகள் ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணிகளுக்காக வயநாடு வந்தது என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார். பெங்களூரிலிருந்து ஒரு பொறியியல் பணிக்குழு முண்டகாயம் மற்றும் கூட்டிக்கலுக்கு வந்தது. தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குனர் ஜெனரல் S N பிரதான் மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா, பாலக்காடு, கோட்டயம், கண்ணூர் மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் தலா ஒரு குழுவும், இடுக்கியில் இரண்டு அணிகளும் அனுப்பபடும் என்று நேற்று கூறியிருந்தார். அதன்படியே படைகளும் அனுப்பி வைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமையான இன்று மழை ஓரளவு குறைந்துவிட்டதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைப்பேசியில் பேசி கேரள மக்களுக்கு தேவையானஅனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசினார். அவர் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.